நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்றம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. கரோனாவுக்கு பயந்து காணொளியில் விசாரிக்கும் கோர்ட் மாணவர்களை நேரில் தேர்வு எழுத சொல்வதாக அறிக்கையில் நடிகர் சூர்யா கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் 6 பேர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரும் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், இன்று (18/09/2020) அரசு தலைமை வழக்கறிஞருடன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 'நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை' என்று அறிவித்து, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் பொது விவகாரங்கள் குறித்து விமர்சிக்கும்போது கவனம் தேவை. நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவிக்கக்கூடாது. விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக்கூடாது என்று சூர்யாவுக்கு அறிவுறுத்தினர்.