சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமானி, 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார். இந்நிலையில் இந்தியாவின் பழமை வாய்ந்த 75 நீதிபதிகளை கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வெறும் 3 நீதிபதிகளை மட்டும் கொண்ட மேகலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு வி.கே. தஹில் ரமானியை இடமாற்றம் செய்து, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிந்துரை செய்தது.
இந்த இடமாற்றம் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கொலீஜியத்திற்கு தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமானி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தஹில் ரமானி தனது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை ராஜினமா செய்தார். இது நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்ற உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் இன்று கோர்ட்டை புறக்கணித்து நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற பணியை புறக்கணித்து, கன்னியாகுமரி நீதிமன்ற முகப்பு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.