சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சாதிசான்றிதழ் கேட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் பழங்குடியினரே இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்த நபர் உயிரிழந்தார்.
தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்ட காவலர்கள், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வேல்முருகன் உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த வேல்முருகன் என்பவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர் இல்லை என்றும் வேல்முருகன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பழங்குடியினர் சான்று கோரி வழங்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது எனவும், விண்ணப்பித்த ஆறு நாட்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும், எந்த அலைக்கழிப்பும் செய்யவில்லை என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சாதி சான்று கொடுக்காமல் அலைக்கழித்ததாக கூறி தற்கொலை செய்துகொண்ட வேல்முருகன் எந்த வகுப்பை சேர்ந்தவர் என விசாரிக்க ஆணை பிறப்பித்துள்ளது.