சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமணியை மேகாலயா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை நியமித்து கொலிஜியம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில் இடமாற்றம் குறித்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு நீதிபதி தஹில் ரமணி கோரிக்கை விடுத்தார். இருப்பினும் தஹில் ரமணியின் கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்தது. அதனை தொடர்ந்து நீதிபதி தஹில் ரமணி உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் தனது ராஜினாமா குறித்து ஆலோசனை செய்ததாகவும், தமது ராஜினாமா கடிதத்தை நாளை முறைப்படி வழங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 3- வது பெண் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி, கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய உயர்நீதிமன்றத்தில் இருந்து சிறிய உயர்நீதிமன்றத்திற்கு ஒரு தலைமை நீதிபதியை கொலிஜியம் மாற்றுவது, இதுவே முதல்முறை ஆகும். இதன் காரணமாகவே தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை நீதிபதி தஹில் ரமணி எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.