சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், எழும்பூர், சேப்பாக்கம், சென்ட்ரல், மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், போரூர், செம்பரம்பாக்கம், பூவிருந்தமல்லி, காட்டுப்பாக்கம், திருவேற்காடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, சேவூர், குண்ணத்தூர், மலையாம்பட்டு, களம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.
மழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தொடர்மழை பெய்தால் நீர் தொடர்பான நோய்கள் வேகமாக பரவும் என்பதால் உச்சபட்ச கவனத்துடன் இருக்க தமிழகம், ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.