சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை இல்லை என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூலாக சொல்லி வருவது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான பைப் லைனில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சென்னை மக்களுக்கு குடி நீர் வழங்குவதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் பைப் லைன் கொடுத்துள்ளது சென்னை மெட்ரோ நிறுவனம்.
அதாவது, சென்னையின் முக்கியப் பகுதிகளில் குடிநீர் ஃபில்லிங் பாயிண்டுகள் இருக்கின்றன. இந்த ஃபில்லிங் பாயிண்டுகளில் இருந்து ஒரு மெயின் பைப் லைன் வீதிகளுக்குச் செல்லும். அந்த பைப் லைனிலிருந்து வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு கொடுக்கப்படும். ஃபில்லிங் பாயிண்டிகளில் தண்ணீர் திறந்து விடும்போது அனைத்து வீடுகளுக்கும் சரிசமமாக தண்ணீர் போய்ச்சேரும். ஆனால், அதிகாரிகளின் துணையுடன் சில தில்லுமுல்லுகள் நடந்துள்ளன என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய மெட்ரோ பணியாளர்கள், " ஃபில்லிங் பாயிண்டுகளிலிருந்து மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்காக மட்டும் தான் பைப் லைன் போடப்பட்ட வேண்டும். ஆனால், தற்போது சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல்கள், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பிரபல வர்த்தக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், சில வி.வி.ஐ.பி.யின் வீடுகள் ஆகியவற்றிற்கு ஃபில்லிங் பாயின்டுகளிலிருந்து தனி பைப் லைன் அமைத்து நேரடியாக இணைப்புத் தரப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 130 இணைப்புகள் இப்படி தரப்பட்டுள்ளன. ஃபில்லிங் பாயிண்டுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதும் இந்த தனி பைப் லைன் களில் தண்ணீர் செம வேகத்தில் கொட்டும். இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் பைப் லைனில் அழுத்தம் குறைவாக ஏற்படுவதால் தண்ணீரின் வேகம் குறைந்து வீடுகளுக்கு முறையாக தண்ணீர் போய்ச்சேர்வதில்லை. தற்போது குடிநீர் பஞ்சம் அதிகரித்திருப்பதால் ஃபில்லிங் பாயிண்டுகளிலிருந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை. எப்போதாவதுதான் திறந்து விடுகிறார்கள். அதே சமயம் குறிப்பிட்ட வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், வி.வி.ஐ.பி.களுக்கு மட்டும் தடையின்றி தண்ணீர் பாய்கிறது. பல வருடங்களாக இந்த தில்லுமுல்லுகள் நடந்து வருகின்றன " என சுட்டிக்காட்டுகிறார்.