தமிழகம் ஊழலில் மட்டும்தான் முன்னேறி உள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சேலத்தில் இன்று கூறினார்.
சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் இன்று (ஆகஸ்ட் 5, 2018) நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது:
’’எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஒரு வளர்ச்சித் திட்டமாவது நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை அவரால் சொல்ல முடியுமா? தமிழகம் எல்லா துறைகளிலும் பின்னோக்கி செல்கிறது. ஆனால் ஊழலில் மட்டும் முன்னேறி உள்ளது. தொழில்துறையில் தமிழகம் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது.
ஆளுங்கட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தம் வழங்கியதில் 5 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், தார் கொள்முதலில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், இவை தவிர தாதுமணல், மின்சாரம், அரசு ஊழியர்கள் நியமனம், வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் என பெரிய பட்டியலே போடலாம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்துள்ளதாக கூறுகிறார். வளர்ச்சித் திட்டம் அதிகரித்துள்ளதா? ஊழல் அதிகரித்துள்ளதா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த முதல்வர் தயாரா?
பிளஸ்2 முடித்தால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளனர். பிளஸ்2 மற்றும் அதற்கு மேலும் படித்த 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கே இன்னும் வேலை வழங்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது வெறும் பிளஸ்2 முடித்தவர்களுக்கு எப்படி வேலை தருவார்கள்?
அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் மதிப்பீடு செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது சம்பந்தமாக விரிவான விசாரணை வேண்டும். இந்த ஊழலில் மேலும் பல ஊழல் வெளிவர தொடங்கி உள்ளது.
அண்ணா பல்கலையில் எல்லா தேர்வுக்கும் சேர்த்து ஓர் ஆண்டுக்கு 2 லட்சம் வினாத்தாள் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் அங்கு பத்து ஆண்டுகளுக்கு தேவையான 20 லட்சம் வினாத்தாள்களை கூடுதலாக அச்சடித்துள்ளனர். இதனால் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சிபிஐ துறை மூலம் பல்வேறு வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இத்திட்டத்தை கைவிடும்வரை தொடர்ந்து போராடுவோம். மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 94 டிஎம்சி ஆகும். தற்போது 60 முதல் 65 டிஎம்சி மட்டுமே தண்ணீர் நிறைந்துள்ளது. மீதி சேறும் சகதியுமாக உள்ளது. இதில் 15 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. காவிரி நீர் வழித்தடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக அன்புமணி ராமதாஸ், நீர் மேலாண்மை பற்றி பெரிய அளவிலான புள்ளி விவரம் வைத்துள்¢ளார்.
இது தொடர்பாக அவருடன் தமிழக அரசு விவாதிக்க தயாரா? சேலம் இரும்பாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு மீண்டும் அவர்களது நிலத்தை கொடுக்க வேண்டும். இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கூறினார்.
மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் அருள், சேலம் மாவட்டத் தலைவர் கார்த்தி, மாநில மாணவரணி செயலாளர் விஜயராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.