Skip to main content

சென்னையில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து 2 வடமாநில வாலிபர்கள் மீது கொடூர தாக்குதல்..!

Published on 02/07/2018 | Edited on 02/07/2018
aatt



குழந்தை கடத்த வந்ததாக தவறாக நினைத்து, வடமாநில வாலிபர்கள் இரண்டு பேரை தேனாம்பேட்டையில் பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பலரின் மீதும் தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. அதில் குறிப்பாக வடமாநில வாலிபர்களை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பரவி இருந்த இந்த சந்தேகத்தீயானது தற்போது சென்னையிலும் பரவ தொடங்கியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களுக்கு அவினாஷ் (4) என்ற மகன் உள்ளான். வரலட்சுமி தனது மகன் அவினாஷை வீட்டில் விட்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுள்ளார். வரலட்சுமியை பின்தொடர்ந்து அவினாஷ் ஓடியுள்ளான். அதை அவர் கவனிக்கவில்லை. அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர், அந்த வழியாக தங்கள் அறைக்கு சென்றுள்ளனர். சிறுவன் மட்டும் தனியாக ஓடுவதை பார்த்த வடமாநில வாலிபர்களில் ஒருவன், அந்த சிறுவனை மடக்கி எங்கே செல்கிறாய் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது வரலட்சுமி வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த கொருக்குபேட்டையை சேர்ந்த செல்வராஜ் என்ற வாலிபர், இதை பார்த்து வடமாநில வாலிபர்களிடம் குழந்தையை கடத்த வந்தீர்களா என்று சத்தம் போட்டுள்ளார்.

 

 

இதனால் அதிர்ச்சியடைந்த வடமாநில வாலிபர்கள் 2 பேரும் பயத்தில் சிறுவனை விட்டுவிட்டு வேகமாக அவர்கள் அறைக்கு சென்றனர். உடனே செல்வராஜ், குழந்தை கடத்த வந்த கும்பல் என்று சத்தம் போட்டபடியே உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் பைக்கில் வடமாநில வாலிபர்களை துரத்தி சென்று தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் 2 வடமாநில வாலிபர்களை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பொதுமக்களும் என்ன என்று கேட்காமல் அனைவரும் சேர்ந்து சிக்கிய 2 வாலிபர்களையும் கைகளை கட்டிப் போட்டு அடித்து உதைத்தனர்.

ஒரு கட்டத்தில் 2 வாலிபர்களும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து இரண்டு வாலிபர்களையும் மீட்டனர். இருவரும் சுயநினைவு இல்லாமல் இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவர்கள் பரிந்துரைப்படி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் 5 வாலிபர்களும் ஒடிசா மாநிலம் தேபாகர் மாவட்டம் கண்டால் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 5 பேரும் தேனாம்பேட்டையில் வீடு எடுத்துள்ளனர். இவர்களில் 2 பேர் நேற்று முன்தினம் பணி முடிந்து தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலை வழியாக காமராஜர் சாலை அடைந்து அறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 4 வயது சிறுவன் அவினாஷ் தனது அம்மா வரலட்சுமி பின்னால் சென்று உள்ளான்.

இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரலட்சுமி வீட்டின் அருகே வசித்த போது, சிறுவன் அவினாஷடன் பழகியுள்ளனர். இதனால் சிறுவனை பார்த்ததும் எங்கே போகிறாய் என்று கேட்டு சிறுவனை தூக்கி உள்ளனர். இதை பார்த்த செல்வராஜ் என்ற வாலிபர், என்ன என்று கேட்காமல் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து சத்தம் போட்டு பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து அடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து வடமாநில வாலிபர்களை தாக்கிய நபர்கள் யார் யார் என்பது குறித்து வீடியோ பதிவு மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

விடைபெறும் 'புதுச்சேரி சிறுமி' - கண்ணீருடன் திரண்ட மக்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Puducherry girl'-tearful crowds

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியைத் தேடியதும் தெரிய வந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரிய வந்தது.

சிறுமியைக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை காவடி குப்பம் சிவாஜி சாலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு ஐபிஎஸ் கலைவாணன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. அந்த சிறப்பு புலனாய்வு குழுவே இனிமேல் இந்த வழக்கை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர். புகாரளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் குழந்தையை மீட்டு இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவலர்கள் மீது எழுந்த புகாரை அடுத்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் கூண்டோடு மாற்றப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Puducherry girl'-tearful crowds

படு சுட்டியான அந்தச் சிறுமி சோலை நகர் பகுதி மக்கள் அனைவருக்கும் செல்லக் குழந்தையாக இருந்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள ஒவ்வொருவர் வீட்டிற்கும் எப்பொழுது வேண்டுமானாலும் விளையாடச் செல்வாராம். அந்த அளவிற்கு அந்த பகுதி மக்கள்  குழந்தையிடம் பழகி வந்துள்ளனர். மேலும் சிறுமியின் பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்பதால் அந்த பகுதி மக்கள் அந்த குழந்தைக்கு சில உதவிகளையும் செய்து வந்தனர். இந்தநிலையில் அச்சிறுமியின் கொலை சம்பவம் அந்த பகுதி மட்டுமல்லாது சமூக வலைத்தளங்கள் வாயிலாக பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது சிறுமியின் இறுதி ஊர்வலம்  தொடங்கி உள்ளது. எந்தவித அழைப்புகளும் இல்லாமலேயே தற்பொழுது அங்கு ஆயிரக் கணக்கிற்கும் மேலான பொதுமக்கள் ஒன்று கூடி கண்ணீருடன் நடந்து வருகின்றனர்.

Next Story

சிறுமி கொலை சம்பவம்; கடலில் இறங்கி இளைஞர்கள், பெண்கள் போராட்டம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Girl  incident; In Puducherry, youths and women went into the sea and protested

புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாட சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையின் பின்னணியில் உள்ள கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி அந்தப் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றபோது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம் இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர் என சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில், 'கஞ்சா குடிக்கிங்க 7 பேர் சேர்ந்து கை,கால்களை கட்டிப்போட்டு செஞ்சிருக்காங்கப்பா... கைபுள்ளப்பா அது' என பேசும் அந்த ஆடியோ பரவி வருகிறது. அந்த ஆடியோ அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் துப்பு துலக்கும் விதமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை பிடித்து போலீசார் நேற்று மதியத்தில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்து மூட்டை கட்டி சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது. மேலும் கருணாஸ் என்ற அந்த இளைஞர் போலீசாருடன் சேர்ந்து அவர்களுக்கு உதவுவது போல் சிறுமியை தேடியதும் தெரியவந்துள்ளது. மேலும் கருணாஸ் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவன் என்பது தெரியவந்துள்ளது.

கடத்தல் வழக்காக இருந்த இந்த சம்பவம் போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றப்பட்டது. இன்று சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Girl  incident; In Puducherry, youths and women went into the sea and protested

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த செய்திகள் பரவின. இந்நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை பகுதியில் கருப்பு சட்டை அணிந்து ஒன்றுகூடிய இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் சிறுமியின் புகைப்படம் பொறித்த பதாகையை ஏந்தி நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.