சென்னையில் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அயனாவரத்தில் ஆய்வு செய்தார். மேலும் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அமைச்சர் கபசுர குடிநீரை வழங்கினார். இந்த ஆய்வின் போது அமைச்சருடன், கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தனி மனித இடைவெளி மிகப்பெரிய சவாலாக உள்ளது; தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் பணியாளர்கள் 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றுகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா இல்லாத திரு.வி.க.நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். கரோனா இல்லாத நியூசிலாந்து உருவானது போல் மக்கள் ஒத்துழைத்தால் சென்னையையும் மாற்ற முடியும்." என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், "சென்னையில் கரோனா தொற்று இல்லாத 84% தெருக்களில் கரோனா வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திரு.வி.க. நகர் பகுதிகளில் கடந்த 14 நாட்களாகத் தொற்று இல்லாத பகுதிகளும் உள்ளது. தொற்று உள்ள தெருக்களில் மேலும் கரோனா பரவாமலும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது." என்றார்.