வாணியம்பாடியில் -சேலம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை குண்டும் குழியாக உள்ளதை கண்டித்தும், அதனை சீர் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணை செயலாளர் டி.கே.ராஜா கலந்து கொண்டு ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலம் வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை மாவட்டத்தின் முக்கியமான சாலையாகும். இந்த சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகிறது.
இந்த சாலை சேலம் வரை சுமார் 135 கிலோமீட்டர் சாலை முழுக்க சிறு மற்றும் பெரிய அளவிலான ஏரளாமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை உடனடியாக சரிச்செய்யவில்லையென்றால் இன்னும் தீவிரமான போராட்டம் நடைபெறும். தமிழக நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீர் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.
போராட்டம் நடத்தப்போவதாக பாமக சில தினங்களுக்கு முன்பு அறிவித்ததும் திடீரென அது போராட்டம் நடத்திய அன்றே சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறை வேலையை தொடஙகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.