நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை விமான நிலையப் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் இருபதாம் தேதி வரை ஐந்தடுக்கு பாதுகாப்பு சென்னை விமான நிலையத்தில் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நாட்டின் முக்கிய இடங்களில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கியமான விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் வாயில் பகுதியிலேயே நிறுத்தி, பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.
அதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் கொண்டுவரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்கள் மட்டுமல்லாது தற்போது கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்பட்டு விமான நிலையம் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐந்தடுக்கு பாதுகாப்பு முறை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனவும், குறிப்பாக ஆகஸ்ட் 13, 14, 15, ஆகிய நாட்களில் உச்சக்கட்ட பாதுகாப்பாக, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏழடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.