உணவுப் பொருட்களின் தரம் குறித்து அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், சேலத்தில் ஜவ்வரிசி ஆலையிலேயே கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் ஜவ்வரிசி தொழிற்சாலை சீல் வைக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது.
சேலம் தலைவாசல் அருகே உள்ள சித்தேரி பகுதியில் அமைந்துள்ளது. நியூ பாரத வேல் சேகா ஃபேக்டரி. அந்த ஆலையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 'நான் ஃபுட் கிரேட்' ரகத்தைச் சேர்ந்த சோடியம் ஹைபோ குளோரைடு கெமிக்கல் மூன்று கேன்களில் இருந்தது தெரிய வந்தது, உணவுப் பாதுகாப்புத் துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு ஜவ்வரிசி தயாரித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சேகோ 13,200 கிலோ, ஸ்டார்ச் மில்க் 27 ஆயிரம் கிலோ, ஈர ஸ்டார்ச் மாவு 7500 கிலோ, மக்காச்சோளம் 40 கிலோ, ஹைப்போ கெமிக்கல் 12 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு மொத்தமாக 19 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு தயாரிக்கப்பட்ட மாதிரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த ஆலையின் உரிமையாளருக்கு இது தொடர்பாக நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.