ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்துள்ளதாகத் தலைமை ஆசிரியர் அளித்த புகார் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் கெமிக்கல் கலந்துள்ளதாக அப்பள்ளி தலைமை ஆசிரியை புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அப்பள்ளிக்குச் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவில் பட்டியலின இளைஞர் ஒருவரைக் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யத் தடுத்தது பெரும் பிரச்சனையாக மாறியது. அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கோவிலைப் பூட்டி சீல் வைத்தார். பின்னர் இருதரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கோவிலைத் திறந்து வைத்தார். இந்த பிரச்சனை முடிந்து தற்போது நிலைமை சீரான நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் (பினாயில் அல்லது சோப் ஆயில்) கலந்துள்ளதாக எழுந்துள்ள சம்பவம் மீண்டும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.