![che guevara daughter aleida guevara say tamilnadu name in louder](http://image.nakkheeran.in/cdn/farfuture/X9C9gf6T_s3Fk2QxmIazbC5_XHZeRJVGKo0fIPAol1U/1674115456/sites/default/files/inline-images/art-cheguvara.jpg)
புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா மற்றும் அவரது மகள் பேரா. எஸ்டெஃபானி குவேரா ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். இவர்களுக்கு நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அலைடா குவேரா பேச தொடங்கும் முன்பு, அங்கு இருந்த கூட்டத்தினரை பார்த்து உங்கள் மாநிலத்தின் பெயர் என்ன? என கேட்டார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் 'தமிழ்நாடு' என்று கூறினார். அதற்கு அலைடா 'தமிழ்நாடு' என்பதை அழுத்தமாக கூறுமாறு கூறினார் . இதனை கேட்ட கூட்டத்தினர் அனைவரும் ஒருமித்த குரலில் 'தமிழ்நாடு' என்பதை அழுத்தமாக அரங்கம் அதிரும் வகையில் தமிழ்நாடு என முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து மேலும் அவர் பேசும்போது, "இந்த பயணத்தின் போது எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளில், தமிழ்நாட்டில் அளிக்கப்பட்ட வரவேற்பு எனக்கு மிக பெரிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நான் பிறந்த போது எனது தாயார் என்னிடம் கூறியது தற்போதும் நினைவில் இருக்கிறது. அதாவது, 'இந்த மண்ணில் கால் ஊன்றிய நீ எப்போதும் உறுதியாக இருக்க வேண்டும்' என கூறினார்.
நாம் அனைவரும் ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்று சேர வேண்டும். நான் யாருடைய மகள் என்பது முக்கியம் இல்லை. என்னுடைய கொள்கை என்ன? நான் யாராக இருக்கிறேன் என்பது தான் முக்கியம். கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா எங்கள் மீது எத்தனை தடைகள் விதித்தாலும் கியூபா மக்களின் மகிழ்ச்சியை மட்டும் அமெரிக்காவால் தடுக்க முடியாது. எனது தந்தை இறப்பின் போது உலகம் முழுவதிலும் உள்ள மக்களில் பெரும்பாலானோர் மிகவும் வருத்தப்பட்டனர். நாம் ஒருவரின் இறப்புக்காக அழ வேண்டியது இல்லை. அவர் மக்களுக்கும் இந்த சமூகத்திற்கும் ஆற்றிய கடமைகளை தொடர்ந்து நாம் பின்பற்றியும், செயல்படுத்தியும் வந்தாலே அவர் நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்." என பேசினார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக சார்பில் கனிமொழி எம்பி, மதிமுக சார்பில் வந்தியத்தேவன், விசிக சார்பில் தொல் திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பில் பலரும் கலந்து கொண்டனர்.