மத்திய பொதுத்துறை நிறுவனமான நவரத்தினா, தகுதி பெற்ற என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் நெய்வேலியில் அமைந்துள்ள தெற்கு மண்டல தேசிய மின்சக்தி பயிற்சி நிறுவனம் இணைந்து என்.எல்.சி. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிறுவன திட்டங்களுக்கு வீடு மற்றும் நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மின் சக்தி துறையில் பட்டய மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளுக்கான பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை சிறப்பு விருந்தினராக என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மேலாண் இயக்குநர் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பயிற்சியைப் பெற விரும்புபவர்கள் முழு திறனோடும் ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்று நிர்வாக மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்க வேண்டும். மேலும் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கும் மின் துறை மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றிற்கான தேவையின் இடைவெளியை ஈடு செய்யும் வகையிலும் என்.டி.பி.ஐ நிறுவனம் இதுபோன்ற தொழில்நுட்ப பயிற்சியாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும். என்.எல்.சி இந்தியா சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது வழங்கப்பட்டு வரும் என்.பி.டி.ஐ பட்டய படிப்பில் கூடுதலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவை சேர்த்திட அவர் பரிந்துரை செய்தார்.
என்.பி.டி.ஐ பொது இயக்குநர் டாக்டர் திரிப்தா தாகூர் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், ஒருங்கிணைந்த முயற்சியின் வாயிலாக மின் உற்பத்தி நிலைய பொறியியல் படிப்பில் வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு வருட பட்டய படிப்புகள் என பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியை முடிப்பவர்கள் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் அதிக ஊதியத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற இது வழிவகுக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், என்.எல்.சி இந்தியா நிறுவன நிர்வாக இயக்குநர்கள் மோகன் ரெட்டி, சமீர் ஸ்வரப், வெங்கடாசலம், உயர் அதிகாரிகள் மற்றும் என்.பி.டி.ஐ அதிகாரிகள், அலுவலர்கள், பயிற்சி பெற உள்ள மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக என்.பி.டி.ஐ தென் மண்டல இயக்குநர் செல்வம் வரவேற்றார், துணை இயக்குநர் அமிர்தவல்லி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் நிறைவாக துணை இயக்குநர் வெற்றிவேல் நன்றி கூறினார்.