சென்னை சுங்கத் துறை அலுவலகத்தில் கேண்டீன் உதவியாளர் மற்றும் ஓட்டுநர்கள் பணிக்கான 17 காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகம் உட்பட இந்தியா முழுவதில் இருந்தும் பலவேறு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களில் தகுதியான 1,600 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான எழுத்துத் தேர்வு நேற்று (14ம் தேதி) சென்னையில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தத் தேர்வின் போது சென்னை காவல்துறையினர் அவர்களை வழக்கமான சோதனை செய்தனர். அப்போது, தேர்வில் பங்கேற்ற உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காதில் ப்ளூடூத் மற்றும் உடலின் கால், இடுப்பு பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் மின்சாதன கருவிகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சோதனையில் மொத்தம் 28 வடமாநிலத்தவர்களை சென்னை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும், இனி அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாத வகையில் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தத் தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷேர் சிங் என்பவருக்கு பதிலாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்பவர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வுக்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காவல் துறையினர் ஆள்மாறாட்டம் செய்ததற்காக சர்வன் குமாரை கைது செய்துள்ளனர்.