கரோனா, ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழ்நாடு முழுவதும் நாளை (06/01/2022) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தல்களின்படி கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (06/01/2022) முதல் வார நாட்களில் (திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை) காலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயக்கப்படும். நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
அனைத்து முனையங்களில் இருந்தும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 09.00 மணிக்கு தொடங்கி, இரவு 10.00 மணிக்கு முனையத்தை வந்தடையும். கூடுதலாக, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வருகின்ற ஜனவரி 9- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கு காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன." இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.