தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கனமழை காரணமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (30.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2023) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அரசு அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.