தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று (30.06.2024) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்டிருந்த மற்றொரு அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.