தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் நாளை மறுநாள் (16.12.2024) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (14.12.2024) ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம், தேனி மற்றும் திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (14.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கனமழை காரணமாகத் திருநெல்வேலியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (14.12.2024) நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று ஒத்திவைக்கப்பட்ட பருவ தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று (14.12.2024) காலை 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.