தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை வெள்ளபாதிப்புக்குள்ளான பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்கிட தமிழக அரசுக்கு அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், வி.சி.க. பொதுச் செயலாளருமான சிந்தனைச் செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடலூர், அரியலூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் (12.12.2024) பொழிந்த எதிர்பாராத கனமழையின் விளைவாக காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோவில், திருமுட்டம் ஆகிய வருவாய் வட்டங்களைச் சார்ந்த கிராமங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன பெரும்பாலான கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
வானிலை மையங்களின் மூலமாக தரப்பட்ட குறிப்பு 20 செமீ மழை பொழியக் கூடும் என்பது. ஆனால் ஒரே இரவில் அரியலூர் ஜெயங்கொண்டம் கடலூர் பகுதியில் 31 செமீ மழை பெய்துள்ளது. அதன் விளைவாக 10 ஆயிரம் கன அடி நீர் வரத்து வீராணம் ஏரிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 ஆயிரம் கன அடி நீர் விநாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள மூன்று செங்கால் ஒடைகளும் கரைகள் உடைந்து வெள்ளம் சமவெளிப் பகுதிகளிலும் குடியிருப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. கருவாட்டோடை, மண வாய்க்கால், பாப்பாகுடி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களும் கொள்ளளவை மீறிய வெள்ளத்தை கடத்த முடியாமல் உடைப்பெடுத்துள்ளன. நகரப்பாடி ஏரி, பாண்டியன் ஏரி, காவனூர் ஏரி, பாளையங்கோட்டை புத்தேரி, பொன்னேரி ஆகிய ஏரிகள் நீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
எதிர்பாராத இந்த வெள்ளப் பெருக்கால் திருமுட்டம் காட்டுமன்னார்கோவில் ஆகிய வட்டங்களை சார்ந்த பெரும்பாலான கிராமங்கள் கடும் பாதிப்பு அடைந்திருக்கின்றன நெற்பயிர்கள் பல ஆயிரம் ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் எதிர்பாராத நீர்வரத்து காரணமாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்ப்பாசனத்துறை தண்ணீரைத் திறந்து விட்டிருக்கிறது. 16000 கட அடி கொள்ளளவை தாங்ககூடிய வீராணம் ஏரியின் வடிகாலான வெள்ளியங்கால் ஓடையில் தற்போது 25000 கன அடி வெள்ளம் போய் கொண்டிருக்கிறது. இதனால் காட்டுமன்னார்கோவிலில் சிலப்பகுதிகள், ருத்திர சோலை, கொளக்குடி, எள்ளேரி, சர்வராஜன் பேட்டை, நந்திமங்கலம் வடக்கு மாங்குடி உள்ளிட்ட கரையோர கிராமங்கள் யாவும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
எனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டுமன்னார்கோவில், திருமுட்டம் வருவாய் வட்டங்களை வெள்ளம் பாதித்த பகுதியாக அறிவித்து மீட்பு பணிகளை துரிதப்படுத்துவதோடு பெஞ்சால் புயல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு வழங்கியதைப்போல உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மண்டபங்களிலும், மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அரசு கட்டடங்களிலும் திருமண தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தது ஒரு வார காலத்திற்கு அவர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு குடியமர செல்லுகிற வரை மூன்று வேளை உணவு, குழந்தைகளுக்கு பால், போர்வை ஆகியவற்றை அரசு சார்பில் ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் வேண்டுகிறேன். தங்களின் அறிவுரையோடு காலை முதலே களத்தில் நின்று மீட்புப்பணிகளை செய்துவரும் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் பாராட்டுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.