Skip to main content

“ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 14/12/2024 | Edited on 14/12/2024
This is the moment when democratic forces should unite  CM MK Stalin

மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என தமிழக முதல்வரும்,  திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக, ‘இலட்சிய வைராக்கியத்தின் வெற்றிக் களம் வைக்கம்’ என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், “எந்தத் தெருவில் நடப்பதற்குச் சாதிப்பாகுபாடு தடையாக இருந்ததோ, அந்தத் தெருவில் சாரை சாரையாக மக்கள் நடந்து செல்கிறார்கள். அதில் சாதிப் பாகுபாடு இல்லை. எந்தத் தலைவர் இந்த உரிமைக்காகப் பாடுபட்டு நிறைவேற்றிக் காட்டினாரோ அந்தத் தலைவருக்கான நினைவிடம் புதுப்பொலிவுடன் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் வைக்கம் நகரில் இதனை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றபோது, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடலின் விதை நூறாண்டுகளுக்கு முன்பு ஊன்றப்பட்டு, வெற்றிக்கனி தரும் மரமாக, சமத்துவ நிழல் தரும் தருவாக வளர்ந்திருப்பதை நான் மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருமே உணர முடிந்தது.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (இன்றைய கேரளத்தில்) உள்ள வைக்கத்தில் அமைந்துள்ள மகாதேவர்கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நடப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறப்பால் மனிதர்களிடம் பேதம் வளர்க்கும் இந்தச் சாதிக் கொடுமைக்கு எதிராகத் திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கத்தினர், சமூகநீதிச் செயற்பாட்டாளர்கள் 1924ஆம் ஆண்டில் போராட்டம் நடத்திக் கைதான நிலையில், போராட்டத்தை வழிநடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த தந்தை பெரியாரை அழைக்கிறார்கள். ஈரோட்டிலிருந்து வைக்கம் சென்றார் பெரியார். கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளிலெல்லாம் அனைத்து மக்களும் நடப்பதற்கான உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்தார். சிறைப்பட்டார். அஞ்சவில்லை. அவருக்கு எதிராக யாகம் நடத்தப்பட்டது. அவர் கலங்கவுமில்லை. யாகங்கள் அவரது போராட்ட உணர்வை முடக்கிவிடவுமில்லை.

சிறையிலிருந்து விடுதலையாகி, முன்னிலும் வேகமாகப் போராட்டத்தை முன்னெடுத்தார். மீண்டும் சிறைப்பட்டார். அவர் சிறைப்பட்ட நேரத்தில், பெரியாரின் வாழ்விணையர் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் மக்களைத் திரட்டிப் போராடினர். இறுதி வெற்றி பெரியாருக்கே கிடைத்தது. கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது திருவிதாங்கூர் சமஸ்தான அரசு. வெற்றி விழாக் கூட்டத்திலும் பெரியார் பங்கேற்றுப் பேசினார். வைக்கம் போராட்டத்தின் மீது உத்தமர் காந்தியடிகள் கவனம் செலுத்தினார். வைக்கம் போராட்டம் அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் அமைந்திருந்தது. இந்தியாவின் கவனத்தை அது ஈர்த்தது என்பதை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

தனக்கு எவ்வித நேரடித் தொடர்பும் இல்லாத ஓர் ஊரில் ஒடுக்குமுறைக்குள்ளான மக்களின் உரிமைக்காகக் களம் கண்ட தந்தை பெரியாரின் போராட்ட உணர்வுதான் சுயமரியாதை இயக்கத்திற்கு விதையானது. அது திராவிடர் கழகமாக உருவெடுத்து, பெரியாரிடம் பயின்ற பேரறிஞர் அண்ணாவால் திமுக என்ற அரசியல் இயக்கம் தொடங்கப்பட்டு, மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும்,கலைஞரும் மக்கள் தந்த ஆட்சி அதிகாரத்தின் துணையுடன் தந்தை பெரியாரின் சமூகநீதிக் கொள்கைகளைச் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிலைநாட்டினர்.

This is the moment when democratic forces should unite  CM MK Stalin

இவற்றுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக, இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டில், கேரளாவின் வைக்கம் நகரில் தந்தை பெரியாரின் நினைவிடம் 8 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் புதுப்பிக்கப்பட்டது. இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு, சமூகநீதி - சமத்துவக் கொள்கை உணர்வு கொண்ட மூத்த சகோதரராக துணைநின்ற கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் முழு ஒத்துழைப்பினை வழங்கினார். தந்தை பெரியாரின் கொள்கை உறுதி போலவே கம்பீரமாக அமைக்கப்பட்ட அவருடைய நினைவிடம், புதுப்பொலிவு பெற்ற அவரது சிலை, புதிதாக வடிவமைக்கப்பட்ட நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழா டிசம்பர் 12 அன்று நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக டிசம்பர் 11 அன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கொச்சிக்குப் பயணித்தேன்.

பெரியார் நினைவிடத்தையும் நூலகத்தையும் அந்த வளாகத்தையும் மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக உருவாக்கியிருந்தார் திராவிட மாடல் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. எந்தப் பணியைக் கொடுத்தாலும் சிறப்பாக நிறைவேற்றும் அவரது திறமை, கேரள மண்ணிலும் அப்படியே வெளிப்பட்டிருந்தது. ஒரு போராட்டக் களத்தின் வெற்றிக்கான நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையேற்றது மிகப் பொருத்தமாக அமைந்தது. தந்தை பெரியார் நினைவிடத்தை உங்களில் ஒருவனான நான் திறந்து வைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தாலும், மலையாள மண்ணின் மைந்தரான தோழர் பினராயி விஜயனுடன் இணைந்தே ரிப்பன் வெட்டி திறந்து வைத்தேன். தி.மு.க.வின் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இந்த விழாவுக்கு முன்னிலை வகித்தார். 

This is the moment when democratic forces should unite  CM MK Stalin

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற - அதனைச் சிறப்பாக நடத்திட உறுதுணையாக இருந்த அத்தனை பேருக்கும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். பெரியார் எனும் மாமனிதர் கொண்டிருந்த இலட்சிய வைராக்கியத்தின் தொடக்கம்தான் அவர் பங்கேற்ற வைக்கம் போராட்டம். அந்தப் போராட்டத்தில் கிடைத்த வெற்றி என்பது இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கும் இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய உந்துசக்தி. அதன் தொடர்ச்சிதான் திராவிட இயக்கத்தின் கொள்கைப் பயணம்.

அந்தப் பயணம் அரசியல் களத்திலும் தொடர்ந்ததன் விளைவாகத்தான் இந்திய அளவிலான இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம், அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் உள்ளிட்டவையாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவர் நெறிப்படி, அனைத்துச் சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வாழும் சமத்துவபுரங்களைத் தமிழ்நாட்டில் உருவாக்கினார் கலைஞர். அதற்குத் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் சூட்டினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு சமத்துவக் குடியிருப்பு அமைக்கப்பட்டதில்லை என்பதால்தான் நம் தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று போற்றுகிறோம்.

This is the moment when democratic forces should unite  CM MK Stalin

மக்களைப் பிளவுடுபத்தி, மாநிலங்களைச்சிறுமைப்படுத்தி ஆளத் துடிப்பவர்களுக்குப் பெரியார் என்றாலும், சமத்துவம் என்றாலும், சமூகநீதி என்றாலும் இவையனைத்தையும் ஒன்றாக்கிய திராவிட மாடல் என்றாலும் எரிச்சல் ஏற்படுகிறது, வன்மம் வெளிப்படுகிறது. வைக்கத்தில் நூற்றாண்டு விழா நடத்தப்பட்ட அதே நாளில், ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் ஜனநாயக விரோதத் திட்டத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரவை ஒப்புதல் அளித்துக் கொடுங்கோன்மைக்கு வழி வகுக்க நினைக்கிறது.

நடைமுறைச் சாத்தியமில்லாத - மக்களாட்சி முறைக்கு விரோதமான - கூட்டாட்சித் தத்துவத்தைக் குற்றுயிராக்கும் ஒரே நாடு - ஒரே தேர்தல் முறைக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14-2-2024 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வைக்கம் விழாவில் பேசிய கேரள மாநில முதலமைச்சர் தோழர் பினராயி விஜயனும், மாநிலங்களின் சுயமரியாதைக்காக நாம் எழுந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். சுயமரியாதை இயக்கம் கண்டு அதன் வழியாகத் திராவிட இனத்தின் சுயமரியாதையை மீட்ட தந்தை பெரியாரின் வழியில், மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நூறாண்டுகள் கடந்தாலும் நமக்கான போராட்டங்கள் தொடர்கின்றன. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கலைஞர் வழியில் போராடுவோம். அவர்களைப் போலவே வெற்றி காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்