நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு காதல் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. அதுவும் காதல் படங்களுக்கென்றே நேர்ந்துவிட்ட சித்தார்த் நாயகனாக நடித்திருக்கும் இந்த மிஸ் யூ திரைப்படம் இந்த ஆக்சன் பட ட்ரெண்டில் எந்த அளவு ஈர்த்தது என்பதை பார்ப்போம்...
சினிமாவில் சில குறிப்பிட்டு சொல்லும் படியான காதல் படங்களை தவிர்த்து மற்ற அனைத்து காதல் படங்களும் அரைத்த மாவையே அரைத்து அறத பழசான கதை அம்சம் கொண்ட படங்களாகவே அமைகின்றன. அப்படி அந்தப் பட்டியலில் இணையக்கூடிய ஒரு படமாகவே இந்த மிஸ் யூ திரைப்படம் இணைந்து இருக்கிறது. நாயகனுக்கு ஷார்டெர்ம் மறதி ஏற்படுகிறது அந்த மறதியால் தன்னுடைய வெறுக்கும் மனைவியையே யார் என்று தெரியாமல் அவர் மீண்டும் காதலிக்க ஆரம்பிக்கிறார். முடிவில் அந்த காதல் வெற்றி அடைந்ததா இல்லையா என்பதே இப்படத்தின் மீதி கதை.
தினசரி நாளிதழ்களில் வெளிநாட்டு வினோதங்கள் என்ற காலமில் அண்டை நாட்டில் தன் மனைவியை வெறுக்கும் ஒருவர் ஒரு விபத்தில் அம்னீசியா நோய் ஏற்பட்டு வாழ்க்கையில் நடந்ததை மொத்தமாக மறந்து விடுகிறார். அவர் தன் மனைவியையே யாரோ ஒரு பெண் என நினைத்து மீண்டும் காதலிக்கிறார். இப்படி ஒரு செய்தியை இயக்குநர் என் ராஜசேகர் ஏதோ ஒரு நாளிதழில் படித்து இருப்பார் போல. அந்தக் கதை கருவை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு அறதப்பழசான திரைக்கதை அமைத்து பெரிய சட்டியில் பழைய உப்புமா கிண்டி இருக்கிறார்.
அசிஸ்டன்ட் டைரக்டராக இருக்கும் நாயகன் இயக்குநராக மாறுவதற்கான முயற்சியும் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பெரிதாக வேலை இல்லை மூன்று வேளை உணவு, இருக்க இடம், உடுத்த உடை போன்ற அடிப்படை வசதிகள் இருக்கும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வளர்கிறார். அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரு விபத்தில் அவர் தலையில் அடிபட்டு தனது வாழ்க்கையில் இரண்டு வருட காலத்தை மறக்கிறார். அதன் பிறகு தன் மனைவியையே யாரோ ஒரு பெண் என நினைத்து அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். இவர் மனைவியோ அந்த காதலை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார். அது ஏன்? இறுதியில் இவர்கள் சேர்ந்தார்களா, இல்லையா? என்ற கதையை வைத்துக் கொண்டு மிகவும் கோபப்படும் நாயகனாக சித்தார்த்தை காண்பித்து அவரால் பாதிக்கப்படும் பெண்ணாக நாயகி ஆஷிக்க ரங்கநாத் வருகிறார்.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் புதுமையான காட்சிகள் எதுவும் இடம்பெறாமல் ஏற்கனவே அரைத்த மாவை அரைத்தது போல் நாம் பல படங்களில் பார்த்து பழகிய காட்சிகளே இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. அவை எங்குமே பார்ப்பவர்களுக்கு சுவாரசியத்தை தர மறுக்கின்றன. அதிலும் குறிப்பாக ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் படத்தில் படர்ந்து காணப்படுவதாலும், கதை இப்படித்தான் முடியும் என்ற முடிவு ஏற்கனவே நமக்கு தெரிந்து விடுவதாலும் படம் பார்ப்பவர்களுக்கு எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் போய்விடுகிறது. குறிப்பாக யார் என்றே தெரியாமல் திடீரென நண்பராக வரும் கருணாகரன் கொஞ்ச நேரத்திலேயே சித்தார்த்தை தனது கடையின் கல்லாப்பெட்டி வரை கூட்டி சென்று விடுகிறார். இந்த அளவு கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்லாத ஒரு கதை அமைப்பு கொண்ட படமாகவே இப்படம் உருவாகி இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்த ஒரு காட்சி மட்டுமே போதும் இந்த படம் எப்படி இருக்கும் என்று. இந்த ஒரு காட்சியை வைத்து நாம் படத்தை யூகிக்க முடியும். அந்த அளவு ஒரு இம்மெச்சூரான திரைக்கதை அமைத்து பார்ப்பவர்களுக்கு அயற்சியை இயக்குநர் கொடுத்து இருக்கிறார்.
படத்தில் வரும் காதல் காட்சிகளும் பெரிதாக எடுபடாமல் இருக்க, அந்த நேரத்தில் வரும் காமெடி காட்சிகளாவது கொஞ்சம் ஆறுதலை தருமா என்றால் அதுவும் நம்மை நன்றாகவே சோதிக்கின்றன. சித்தார்த்தை சுற்றி கருணாகரன், பால சரவணன் ஆகியோர் வளைத்து வளைத்து காமெடி செய்கின்றனர். ஆனால் எங்குமே சிரிப்பு வரவில்லை. இவர்களுடன் நடித்த சுவஸ்திகாவும் தனக்கு கொடுத்த வேலையை ஏதோ என செய்திருக்கிறார். சித்தார்த் காட்சிக்கு காட்சி மிகவும் கோபப்படுகிறார். தேவையில்லாமல் ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்க சண்டையிட்டு தெறிக்க விடுகிறார். மற்ற நேரத்தில் பம்மிக் கொண்டு காதல் செய்ய முயற்சி செய்கிறார். நாயகி ஆஷிகா ரங்கநாத் அழகாக இருக்கிறார். அளவாக நடித்து பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறார். அவ்வப்போது லொள்ளு சபா மாறன் பன்ச் வசனம் பேசி கவர முயற்சி செய்திருக்கிறார். அப்பாக்களாக வரும் பொன்வண்ணன், ஜெயபிரகாஷ் ஆகியோர் அவரவர் வேலையை செய்து விட்டு சென்று இருக்கின்றனர்.
கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் கமர்சியல் படங்களுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேக்கிங் கில் எந்த ஒரு குறையும் வைக்காமல் படத்தை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார். பொதுவாக காதல் படங்கள் என்றாலே பாடல்கள் தான் அதற்கு USP ஆக அமையும். ஆனால் இந்த படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பாடலும் சிறப்பாக இல்லை. அனைத்தும் சுமார் ரகமே. பின்னணி இசையும் அதற்கு ஏற்றவாறு சுமாராகவே இருக்கிறது.
இப்போதெல்லாம் வரும் திரைப்படங்கள் ஆக்சன் காட்சிகளிலும் சரி மீட்டிங்கிலும் சரி உலகத்தரம் வாய்ந்ததாக அமைந்து பான் இந்தியா படங்களாக விரிந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றியை ஈட்டி வருகின்றன. இந்த மாதிரியான சமயத்தில் ஒரு அறத பழசான கதை அமைப்பு வைத்துக்கொண்டு காதல் படம் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மாதிரியான படங்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய சட்டியில் உப்புமா கிண்டி கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட வைக்கிறது.
மிஸ் யூ - எவ்ரிதிங் இஸ் மிஸ்ஸிங்!