அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கடந்த 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அனுமதி கேட்டு அமலாக்கத்துறை கொடுத்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 14 ஆம் தேதி முதல் இன்று மாலை 3 மணி வரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை மோசமாகத்தான் இருக்கிறது. அவரை நேரில் விசாரித்தால் மேலும் உடல்நிலை குறைவு ஏற்படுவதற்கோ, மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்கோ வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை கடந்த சனிக்கிழமையே மெமோ என்ற அடிப்படையில் மனுவாக தாக்கல் செய்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அமலாக்கத்துறை மெமோ தாக்கல் செய்துள்ளதால் நீதிமன்றக் காவல் முடியும் நாளான 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.