வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (26.10.2023) முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், அதே போன்று காரணமாக தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்பு உள்ளது. அக்டோபர் 29 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 30 ஆம் தேதியை பொறுத்தவரையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல் விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகரைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்” என தெரிவித்துள்ளது.