எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்திக் கொடுப்பது தமிழக அரசின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், அவரை கண்டித்து சேலத்தில் கிணற்றுக்குள் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் - சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைவழிச்சாலை எனப்படும் எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு நடந்தன.
இத்திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், எட்டு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான அரசாணையை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 11ம் தேதியன்று மதுரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''எட்டுவழிச்சாலைத் திட்டம் என்பது மத்திய அரசு கொண்டு வரும் திட்டமாகும். இதற்கும் மாநில அரசுக்கும் சம்பந்தம் இல்லை. இத்திட்டத்துக்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுப்பது மாநில அரசின் கடமை. கையகப்படுத்தப்படும் நிலத்திற்கும், வெட்டப்படும் தென்னை உள்ளிட்ட மரங்களுக்கும் மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்படும்,'' என்றார்.
முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு, சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தும், எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிரந்தரமாகக் கைவிடக்கோரியும், சேலத்தை அடுத்த கூமாங்காடு, புஞ்சைக்காடு பகுதிகளில் விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிட்டத்தட்ட நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வயல்வெளிகளில் நின்றபடியும், அவர்களில் ஒரு பிரிவினர் கிணற்றின் உள் வட்டத்திற்குள் இறங்கி நின்றும் கருப்புக்கொடி ஏந்தி நூதனமுறையில் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் கூறுகையில், ''சேலம் - சென்னை எட்டுவழிச்சாலையால் சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்ல 70 கி.மீ. தூரம் குறையும் என்றும் தொழில் வளம் பெருகும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். விவசாயத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இத்திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை நாங்கள் போராடுவோம்,'' என்றார்.