நெடுவாசல் வடக்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தன்னார்வ இளைஞர்களின் உதவியோடு ஆசிரியர்களின் பங்களிப்போடு பள்ளி திறக்கும் முன்பு வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவு கிடைக்காமல் ரத்த சோகை தாக்கி இருந்தது. அப்போது அந்த மாணவர்களை நோயில் இருந்து காக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் முயற்சியால் அமெரிக்காவில் வாழும் தமிழக இளைஞர்களின் ஒரு நாளுக்கு ஒரு டாலர் திட்டத்தின் கீழ் காலையில் சத்தான உணவு வழங்கும் திட்டத்தை அப்போதைய மாவட்ட கலெக்டர் சுகந்தி தொடங்கி வைத்தார். அந்த காலை உணவு திட்டத்தால் ஒரு வருடத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ரத்த சோகை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஒரு நாளைக்கு ஒரு டாலர் என்ற அமைப்பு மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் ஏழை மாணவர்கள் படிக்கும் கிராமபுற பள்ளிகளின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கிராமபுற பள்ளி குழந்தைகள் பெரும்பாலும் சிறிய வீடுகளில் இருந்து வருவதால் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் தமிழகத்தில் பல பள்ளிகளை தேர்வு செய்து வண்ணம் அடித்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில் நெடுவாசல் வடக்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் வேண்டுகோலின்படி கலர்ஸ் லைப்ஸ் என்ற அமைப்பு வண்ணம் தீட்ட ஆன செலவில் 80 சதவீதம் கொடுத்துள்ளனர் மீதமுள்ள 20 சதவீதத் தொகைளை பள்ளி ஆசிரியர் செலவு செய்து கட்டிடங்களை வண்ணமயமாக்கியதுடன் வகுப்பறைகளின் உள்ளேயும் பல்வேறு ஓவியங்களும் தீட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் கூறும் போது.. அரசு பள்ளியில் படித்து இன்று எத்தனையே இளைஞர்கள் வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். அந்த இளைஞர்கள் அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களின் வருமானத்தில் குறிப்பிட்ட தொகைளை செலவு செய்து வருகிறார்கள். அப்படித்தான் கலர்ஸ் லைப்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த ஷியாம், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டும் எங்கள் பள்ளியுடன் சுமார் 20 பள்ளிகள் வண்ணம் தீட்டப்பட்டது. அதைப் பார்த்து மாணவர்கள் உற்சாகமானார்கள். அதனால் ஒவ்வொரு ஆண்டும் வண்ணம் தீட்டினால் மாணவர்களை மகிழ்விக்கலாம் என்று இந்த ஆண்டும் உதவி கேட்டோம் கிடைத்தது. எங்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதால் 20 சதவீதத்தை ஆசிரியர்கள் செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டும் சேரும் புதிய மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருவார்கள் என்றார்.