கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வைகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மூன்றாவது நாளாக எச்சரிக்கை தொடர்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 13,150 கன அடியாக உள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மூன்றாவது முறையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர் பிடிப்பு பகுதிகளில் மழை ஓய்ந்ததால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு குறைந்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கின் ஆக்ரோஷம் குறைந்துள்ளது.
இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.