தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயமுத்தூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 19 ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகச் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புறநகர்ப் பகுதியைப் பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் நேற்று நள்ளிரவில் இருந்து காலை வரை திடீரென இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துப் பறந்த நிலையில் ஒரு விமானம் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. 4 விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கின. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தது குறிப்பிடத்தக்கது.