Skip to main content

வயதான தம்பதியை தாக்கி செயின் பறிப்பு! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

Chain snatch by Attacking Elderly Couple

 

கடலூர் மாவட்டம்  வேப்பூர் அருகிலுள்ள காட்டுமைலூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் முனியபிள்ளை (74), அவரது மனைவி மலர் ( 60). இவர்கள் இருவரும் வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள லேனா திருமண மண்டபம் பின் பகுதியில் டாஸ்மாக் கடை எதிரில் சொந்தமாக வீடு கட்டி குடியிருந்துவருகின்றனர். வீட்டின் கீழ்ப்பகுதியி்ல் முனியபிள்ளை மகன் ராஜா என்பவர் குடியிருந்துவந்தார். 2 நாட்கள் முன்பு வீட்டைக் காலிசெய்துவிட்டு சென்னை சென்றுவிட்டார். அதனால் கீழ்வீடு பூட்டப்பட்டிருந்தது. மாடி வீட்டில் வயதான தம்பதியரான முனியபிள்ளையும், மலரும் வசித்துவருகின்றனர்.

 

இந்நிலையில், நேற்று (30.06.2021) இரவு ஏழு மணிக்கு முகத்தை மூடிய இரண்டு மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் எறி குதித்து வீட்டிற்குள் நுழைந்தனர். இருவரில் ஒருவர், சமையலறைக்குள் இருந்த மலரிடம் சென்று அவரது கைகளைத் தாக்கி அவர் அணிந்திருந்த பத்து பவுனுள்ள தாலிக்கொடியைப் பறித்துக்கொண்டார். வீட்டின் மற்றொரு அறையிலிருந்த முனியபிள்ளைக்கு மலரின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே ஓடி அவரைப் பிடிக்கும்போது மற்றொரு மர்ம நபர் இரும்பு ராடால் முனியபிள்ளையின் தலையில் தாக்கியள்ளார். அதில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் மர்ம நபரை விட்டுவிட்டு ரத்தம் ஒழுகுவதைத் தடுக்கும்போது மர்மநபர்கள் இருவரும் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

பின்னர் திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன் சம்பவம் நடந்த வீட்டைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் முனியபிள்ளை மகன், மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தம்பதியர் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மக்கள் நடமாட்டமுள்ள நேரத்தில், டாஸ்மாக் கடை எதிரே  நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்