Skip to main content

பேச்சு கொடுத்துகொண்டே மூதாட்டியிடம் செயினை மாற்றி ஏமாற்றிய மர்ம நபர்...

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

chain robber from old lady

 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் பகுதியை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மனைவி பர்வதவர்த்தினி, 62 வயதான இவர் நேற்று நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஒரு மர்ம நபர் மார்க்கெட் பகுதியில் இருந்து பர்வதவர்த்தினி வந்து கொண்டிருந்ததை பார்த்துவிட்டு அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். கிடங்கில் ஏரிக்கரை ஓரம் பர்வதவர்த்தினி தனியாக சென்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த மர்ம நபர் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் பர்வதவர்த்தினியிடம் நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் செயின் எத்தனை சவரன் என கேட்டுள்ளார். 

 

அதற்கு பர்வதவர்த்தினி 4 சவரன் என தெரிவித்துள்ளார். அப்போது அந்த நபர் தான், வைத்திருந்த அதே போன்று ஒரு செயினை எடுத்து காட்டி இந்த செயினும் உங்களுடைய செயினும் எவ்வளவு எடை இருக்கிறது என பார்க்க வேண்டும் உங்களுடைய செயினை கழட்டி தாருங்கள் என கேட்டுள்ளார். உடனே பர்வதவர்தினி எந்த யோசனையும் இல்லாமல் அப்பாவித்தனமாக தன் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை கழற்றி கொடுத்துள்ளார். 

 

அப்போது அந்த மர்ம நபர் தான், வைத்திருந்த கவரிங் செயினையும் பர்வதவர்த்தினி கொடுத்த தங்க செயினையும் இரு கைகளிலும் வைத்து இரண்டும் ஒரே அளவு எடையேதான் இருக்கும்போல் தெரிகிறது  என்று கூறியபடியே கண்ணிமைக்கும் நேரத்தில்தான் வைத்திருந்த கவரிங் செயினை பர்வதவர்த்தினியிடம் கொடுத்துவிட்டு பரிவர்த்தினி கொடுத்த தங்க செயின் உடன் பைக்கில் பறந்துவிட்டார். 

 

சந்தேகமடைந்த பர்வதவர்த்தினி பைக்கில் வந்த மர்ம நபர்கள் அளித்த செயினை கொண்டு சென்று நகை கடைக்காரரிடம் காட்டியுள்ளார். அது கவரிங் நகை என்று கூறியுள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து திகைத்து போய் உள்ளார் பர்வதவர்த்தினி. உடனடியாக திண்டிவனம் காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் தமிழ்மணி, தனிப்பிரிவு காவலர் ஆதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் செயின் பறித்து சென்ற மர்ம நபரின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்