மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் நேற்று முன் தினம் (19-10-23) பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், மாணவர்கள் 4 பேரை அழைத்து கடைக்கு சென்று தனக்கு பழஜூஸ் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.அதனை ஏற்று அந்த 4 மாணவர்களும் ஜூஸ் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக காரில் வந்து கொண்டிருந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ) அம்பிகாபதி, பள்ளி நேரத்தில் மாணவர்கள் கடைக்கு செல்வதை பார்த்துள்ளார். அதையடுத்து, தான் வந்த காரை நிறுத்தி மாணவர்களை அழைத்தார். மேலும், அவர்களிடம், பள்ளி நேரத்தில் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டு விசாரித்தார். அதற்கு மாணவர்கள், ஆசிரியர் ஜூஸ் வாங்க அனுப்பியதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, முதன்மை கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது, ஆசிரியர் மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியருக்கு ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யும்படி தலைமை ஆசிரியரிடம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு சென்றார்.