செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் (CISF) 3 ஷிப்ட்கள் அடிப்படையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரான ரவி கிரண் (வயது 37) என்பவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரவி கிரண் இரவு பணி முடிந்து சக வீரர்களுடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது பேருந்து வேகத்தடையின் மீது ஏறி இறங்கியுள்ளது. அச்சமயத்தில் ரவி கிரண் கொண்டு வந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெடித்தது. இதனால் துப்பாக்கியில் இருந்த துப்பாக்கி குண்டு ரவி கிரண் கழுத்தின் வலது பக்கத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து ரவி கிரண் உடல் பேருந்தில் கொண்டு வரப்பட்டு கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனை வளாகத்தில் வைத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.