சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நீட் தேர்வில் தவறே நடக்கவில்லை எனக் கூறி வந்த மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய பிறகு தேசிய தேர்வு முகமையின் தலைவரை மாற்றியது. பெரும் செலவு செய்து நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் அவர்களது பெற்றோர்களை நீட் முறைகேடுகள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. நீட் தேர்வின் உண்மையான விளைவுகளை உணர்ந்து தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீட் தேர்வு அமலான பிறகு மருத்துவப் படிப்பு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக போய்விட்டது.
நீட் தேர்வை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரல் தற்போது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மாநில மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு (மசோதா) உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.