புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பெயரைக் கேட்டாலே ஓ அந்தப் பள்ளியா நிறைய கேள்விப்பட்டிருக்கோமே.. நேர்ல ஒரு நாள் அந்தப் பள்ளிக்கு போகனும் என்று சொல்லும் பலரும், நான் அந்தப் பள்ளிக்கு போய் வந்துட்டேன் என்று பெருமையாக சொல்வதும் உண்டு.
நான் பச்சலூர்காரன் என்று பெருமையோடு மார்தட்டிச் சொல்லும் ஏராளமான இளைஞர்களும் உண்டு.. எந்த நாளும் வற்றாத அழகான குடிநீர் குளத்தின் கீழ் கரையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பசுமை போர்த்திய சுற்றுவளாகம், பெரிய விழா அரங்கம், 20 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா, ஒவ்வொரு வகுப்பறையிலும் சோப்பு, சீப்பு, கண்ணாடியோடு ஸ்பீக்கர்கள், முழுமையாக குளுகுளு ஏசி, திறன் வகுப்பறைகள், இடிக்க உத்தரவிட்ட கட்டிடம் இன்று வரவேற்பு அறையாகவும், நூலகம், வகுப்பறைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. இத்தனையும் கண்காணிக்க தனித்தனி மாணவர்கள் குழு.
இத்தனை வசதிகளோடு உள்ள பள்ளியில் சமையல் சாப்பாடு எப்படி இருக்கும்.. உணவுப்பொருள் வைப்பறை, சமையல் கூடம் சுத்தம் சகாதாரம், சமையலர்கள் தனி உடையுடன் தலைக்கவசம் அணிந்தே சமையல். சமைத்த உணவை விழா அரங்கில் வைப்பதோடு சமையலர்கள் வேலை முடிந்தது. வகுப்புகள் முடிந்து நேராக சென்று அடுக்கி வைக்கப்பட்டுள்ள தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு குழியடி சென்று கை, தட்டுகளை கழுவிக் கொண்டு அதே வரிசையாக உணவு அறைக்கு வந்து தனக்கு தேவையான உணவை தானே எடுத்துக் கொண்டு டைல்ஸ் தரையில் வரிசையாக அமர்ந்து ஒரு சோறு சிந்தாமல் சாப்பிட்டு தட்டுகளை கழுவி இருந்த இடத்தில் வைத்துச் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த உணவு பாதுகாப்புத் துறை ஆய்வுக்குழு அத்தனைக்கும் தனித்தனியாக மார்க் போட்டு கூட்டிப் பார்த்த போது வெரிக்குட் ரிசல்ட் வந்தது.
மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழை வழங்க அறந்தாங்கி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜேம்ஸ் பள்ளிக்கே வந்து காமராஜர் பிறந்த நாளில் கலந்து கொண்டு வட்டாரக்கல்வி அலுவலர்கள் முன்னாள் மாணவர்கள் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணியிடம் சான்றிதழ் வழங்கி சத்துணவு அமைப்பாளர், சமையலர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டிப் பேசும் போது இது வரை அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்ததில் முழுமையாக சிறப்பாக இருந்ததால் இந்த சான்று வழங்கப்படுகிறது. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார். முன்னாள் மாணவரான புள்ளியியல் துறை அதிகாரியான பச்சலூர் முருகேசன், “நான் படித்த பள்ளி இன்று உலகமெங்கும் பாராட்டப்படுவதில் பச்சலூர்காரன் நான் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்” என்றார்.