புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தமிழ்நாடு அரசு விரும்பும் தலைசிறந்த பள்ளியாக உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி சென்ற முதலமைச்சர் அங்குள்ள அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்து அதேபோலத் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும் என்று சொன்னபோது, பச்சலூர் பள்ளி மாணவர்கள் "முதல்வரய்யா... ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்து பாருங்கள்" என்று நக்கீரன் மூலம் வீடியோவில் அழைப்பு கொடுத்திருந்தனர். விரைவில் முதலமைச்சர் வருவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் மதிய உணவு எடுத்துக் கொள்ளும் அழகே தனி. தனக்கு வேண்டிய உணவைத் தானே எடுத்துக் கொண்டு சுத்தமான டைல்ஸ் தரையில் அமர்ந்து ஒரு சோறு கீழே சிந்தாமல் சாப்பிட்டு வரிசையாகச் சென்று தட்டுகளைக் கழுவி அடுக்கி வைக்கும் அழகு மேலும் சிறப்பு. இதனைக் கண்காணிக்க சில மாணவர்கள் நிற்பதும் சிறப்பு. அத்தனையும் நக்கீரன் வீடியோவில் பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் தான் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ஒரு ஆய்வுக் குழுவினர் பச்சலூர் அரசுப்பள்ளி உள்படப் பல அரசுப் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் கூடம் முதல் மதிய உணவு வழங்கல் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து தரமான, சுத்தமான, சுகாதாரமான சூழலில் மதிய உணவு வழங்கும் அரசுப் பள்ளிக்கான "வெரி குட்" என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் பள்ளிக்கு மேலும் ஒரு நட்சத்திரம் கிடைத்திருப்பது போல மாணவர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடுகின்றனர்.
எந்த அடிப்படையில் இந்தத் தேர்வு செய்யப்பட்டது என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து மதிய உணவு தயாரிப்பு முதல் உணவு வழங்கும் வரை ஆய்வுக்குழு முழுமையாக இருந்து ஆய்வு செய்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பச்சலூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்றனர். மேலும், உணவு தயாரிக்கும் கூடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. மதிய உணவு தயாரான பிறகு அதன் தரம் ஆய்வு செய்யப்பட்டது. பிறகு அப்பள்ளி மாணவ, மாணவிகள் முதல் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைவருமே வரிசையாகத் தட்டுகளைக் கழுவிக் கொண்டுவந்து தங்களுக்குத் தேவையான அளவு சாப்பாட்டைத் தாங்களே எடுத்துக் கொண்டு உணவை வீணாக்காமல் முழுமையாகச் சாப்பிடுகிறார்கள். எல்லாவற்றையும் விட உணவு உண்ணும் அறை முழுமையாகச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளது. அங்கு வரிசையாக அமர்ந்து ஒரு சோறு கூட சிதறாமல் சாப்பிட்டு அழகாக எழுந்து போகிறார்கள். இதையெல்லாம் ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கப்பட்டதில் அதிக மதிப்பெண் பெற்ற பச்சலூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்றனர்.
இது எம் பள்ளி பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அமைப்பாளர், சமையலர்கள் மற்றும் இவற்றையெல்லாம் செய்ய பல்வேறு வகையிலும் உதவியாக இருந்த நல்ல உள்ளங்கள், அதிகாரிகளுக்குச் சேர வேண்டிய பெருமை என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜோதிமணி. இதுபோன்ற பள்ளிகளை முன்மாதிரியாகக் கொண்டால் கொடையாளர்களின் பங்களிப்போடு அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரமான பள்ளிகளாக மாற்றிக் காட்டலாம் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.