கடலூர் மாவட்டம் கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், “தி.மு.க தொடங்கிய 18 ஆண்டுகளிலும், அ.தி.மு.க தொடங்கிய 5 ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் 35 ஆண்டுகள் ஆகியும் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு முதன் முதலில் குரல் கொடுப்பவர் பா.ம.க நிறுவன ராமதாஸ். தமிழகத்தில் 2027ல் பா.ம.க ஆட்சி உறுதியாக அமையும். அதற்கான முன்னோட்டமாக 2024 நாடாளுமன்ற தேர்தல் இருக்கும். ஓட்டு சாவடி களப்பணியாளர்கள் பொதுமக்களை சந்தித்து நம் திட்டங்களை கூற வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் இரண்டு முறை அனைத்து கட்சி கூட்டம் நடந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. 'இந்தியா' கூட்டணியில் உள்ள தமிழக முதல்வர், கர்நாடக முதல்வரை சந்தித்து குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு 2 லட்சம் ஏக்கர் கருகி வருவதைக் கூறி கூடுதலாக தண்ணீர் வாங்க வேண்டும். தமிழக அரசு அனைத்து கட்சிகள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்.
நெய்வேலியில் என்.எல்.சி மூன்றாவது சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்த ரூபாய் 3,700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 26 கிராமங்கள் பாதிக்கப்படும். நிலங்களை அழித்து நிலக்கரி எடுத்து மின்சாரம் தயாரிப்பதை தவிர்த்து மாற்று மின் திட்டங்கள் மூலமாகவும், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்தும் மின்சாரம் தயாரிக்கலாம். வடலூரில் பா.ம.க பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவில்லை. மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடியது தவறா? எங்களின் உரிமைகளை நிலைநாட்ட எந்த எல்லைக்கும் செல்வோம். கலைஞர் இருந்திருந்தால் என்.எல்.சி பணிகளுக்கு விவசாய பயிர்களை அழிக்க விட்டிருக்க மாட்டார்.
கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி ரூபாய் 115 கோடியில் தூர்வாரும் பணியில் ஊழல் நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என முதலமைச்சர் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்து மதம், சனாதனம் என்பது அவரவர் நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையை மற்றவர் இழிவு படுத்தக் கூடாது” என்றார்.