சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நிதி ஆணையத்தின் விதிப்படியே மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து வழங்கப்படுகிறது. நிதிப் பங்கீட்டில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. தமிழகத்திற்கு மத்திய அரசால் 2014 முதல் 2023 மார்ச் வரை வழங்கப்பட்ட நிதி ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 627 கோடியாகும். இந்த தொகைக்கான மானியமாக ரூ. 2 லட்சத்து 58 ஆயிரத்து 338 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலிருந்து பெற்றதைவிடவும் அதிகமாக கொடுத்திருக்கிறோம். 2014 - 2023 மார்ச் வரை தமிழ்நாட்டிடமிருந்து மத்திய அரசு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் லட்சம் கோடியை வரியாக பெற்றிருக்கிறது. ஆனால் இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ரூ.6 லட்சத்து 96 ஆயிரம் லட்சம் கோடியைக் கொடுத்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிதிப்பகிர்வு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்தபோது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு 4000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்ய முடியாது என சிலரால் கூறப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுகின்றனர். தற்போது கூட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் வரை தமிழ்நாட்டிலிருந்து 6.23 லட்சம் கோடி நேரடி வரி வருவாயாக மத்திய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளவில்லை. தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் தமிழகத்திற்கு மத்தியிலிருந்து கிடைப்பது 29 பைசாதான். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த விகிதம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. ஆனால் 2014இல் இருந்து 2023 மார்ச் வரை உத்தரப் பிரதேசத்தில் இருந்து 2.23 லட்சம் கோடி மத்திய அரசுக்கு கொடுத்தால் 15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்ட பணிகள் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50% நிதியை மத்திய அரசு தரவேண்டும் இந்த திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசு ரூ.72 ஆயிரம் கொடுக்கிறது. தமிழக அரசு ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை.
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. இதனால் மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ. 2 ஆயிரத்து 27 ஆயிரம் கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாகப் பணிகளை முடிக்க முடியும். தமிழக அரசு வாங்கும் கடன்களை முதலீட்டுக்குள் கொண்டு வருகிறது. கடன் வாங்கும் தன்மையை தமிழக அரசு எப்போதும் சரியாக மேலாண்மை செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.