மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டை இயற்கைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க மறுத்து, போதிய மத்திய அரசின் சார்பில் நிவாரண நிதியை அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து மதிமுக சார்பில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கினார்.
அதனை தொடர்ந்து துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உரிய நிவாரண பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் நிதி கோராப்பட்டது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாயும், தென்மாவட்ட பாதிப்புகளுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் 21 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு 900 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டதாக கூறியது. இந்த நிதி குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் அரசியல் செய்யக் கூடாது. மத்திய அரசு இனியும் மௌனம் காக்காமல் உரிய நிதியை வழங்க வேண்டும். நிதியும் இல்லை, நீதியும் இல்லை என மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கிறது என்று தான் சொல்வேன்” எனத் தெரிவித்தார்.
அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும். மேலும் இந்த பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.