இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தினுடைய 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு இதேபோல் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அன்றைய ஆளும் கட்சியான அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. பிறகு தனியாருக்கு விற்கப்படுவதாக இருந்த 5 சதவீத என்.எல்.சி பங்குகளையும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு வாங்குவதாக முடிவெடுத்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் என்.எல்.சியின் 7 சதவீத பங்குகள் விற்பனைக்கு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2013ல் என்.எல்.சியின் ஒரு பங்கின் விலை ரூ.75 ஆக இருந்தது. தற்போது ஒரு பங்கின் விலை ரூ. 200க்கும் மேல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன்படி, 7 சதவீதம் பங்குகள் என்பது ரூ. 2000 கோடிக்கும் மேலாக வரும் எனச் சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் நிதி நிலை சூழ்நிலையில், 2000 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்க இயலுமா என்ற கேள்வி எழுவதாகச் சொல்லப்படுகிறது. என்.எல்.சி. இந்தியா லிமிடெட் அரசு நிறுவனத்திற்காகத் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது வரை நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு உரிய நிவாரணமும், பணியும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனைக் கண்டித்து பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் போராடும் நிலையில், மத்திய பாஜக அரசு தற்போது என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பிரச்சனையைத் தீவிரப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.