தமிழ்நாட்டில் மழை, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான ஏழு பேர் கொண்ட மத்திய குழு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு வந்தது. அதைத் தொடர்ந்து, ராஜிவ் சர்மா தலைமையில் நான்கு பேர் ஒரு குழுவாகவும், ஆர்.பி. கவுல் தலைமையில் மூன்று பேர் ஒரு குழுவாகவும் பிரிந்து தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (24/11/2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்தியக் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, உரிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய குழுவிடம் முதலமைச்சர் வலியுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.