கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டி விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 100மீ, 200மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுக்கும் போட்டி, புதையல் எடுக்கும் போட்டி, கூடைபந்து, கையுந்தி பந்து, மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட குழு மற்றும் தனிநபர் விளையாட்டுப் போட்டி விழாவினை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிரிக்கெட் போட்டி விளையாடி போட்டியினை தொடங்கி வைத்தார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை 1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது நூற்றாண்டை தொட்டு வெற்றிகரமாக பயணித்து கொண்டு வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை பொது சுகாதாரத்துறை நடத்தி வருகிறது. மேலும், வருகின்ற பத்தாம் தேதி சென்னையில் தொடங்க உள்ள நூற்றாண்டு ஜோதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு ஜோதி கரூர் மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 1ம் தேதி வந்தடையும். நூற்றாண்டு விழா ஜோதியை வரவேற்கும் பகுதியில் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் பொது சுகாதார ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்கள்.
பின்னர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் 100 என்ற எண் வடிவத்தில் நின்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.