அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் அலை லாரிகளால் தொடர் விபத்துகளும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதேபோன்று கடந்த 2015 ஆம் ஆண்டு ஓட்டக்கோவில் அருகே அரசு பஸ் மீது சிமெண்ட் ஆலை லாரி மோதிய விபத்தில் தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவிகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். அதே போன்று அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் பள்ளி குழந்தைகள் சென்ற பள்ளி வேன் மீது சிமெண்ட் ஆலை லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பள்ளி குழந்தைகள் மற்றும் காப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து அப்போதைய அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் பள்ளி வாகனங்கள் இயக்கப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிமெண்ட் லாரிகளை பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் இயக்க தடை விதித்தார்.
அந்த தடையை தொடர்ந்து லாரிகள் பள்ளிகூடத்தில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பகுதியில் மட்டும் இயக்காமல் நிறுத்தினர். ஆனால் கிராமப்பகுதிகளில் சிமெண்ட் ஆலை லாரிகள் தொடர்ந்து ஆங்காங்கே இயக்கப்பட்டு வந்தது. இதனை அப்பகுதி மக்கள் தட்டி கேட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் செவ்வாய் கிழமை தோறும் சிமெண்ட் ஆலை நிர்வாக அதிகாரிகள் கூட்டம் நடத்தி தடை செய்யப்பட்ட நேரத்தில் லாரிகளை இயக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து வருகிறார்.
அதே போன்று நேற்று மாலை பள்ளி குழந்தைகள் செந்துறை அண்ணா சிலை முன்பு இறங்கி சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த சிமெண்ட் ஆலை லாரி மோதி விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கண்ட இளைஞர்களும் கடைவீதி வியாபாரிகளும் அங்கே வந்த 11 சிமெண்ட் ஆலை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து தடைசெய்யப்பட்ட நேரங்களில் லாரிகள் இயக்கிய ஓட்டுநர்களின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ததோடு லாரி ஓட்டுநர்களை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தார். மேலும் இதுபோன்று லாரிகளை இயக்காமல் இருப்பதற்காக இப்பகுதியில் இயங்கிவரும் சிமெண்ட் ஆலை நிர்வாகங்களின் அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தரவிட்ட விட்டார். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த திடீர் போராட்டத்தால் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.