சேலம் சிறையில் நடந்த திடீர் சோதனையில் கைதியிடம் இருந்து கைப்பேசி, கஞ்சா ஆகியவற்றை சிறைக் காவலர்கள் கைப்பற்றினர்.
சேலம் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில், கைதிகளிடம் தடையை மீறி கைப்பேசி மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் புழக்கம் உள்ளது. சிறைத்துறை நிர்வாகம் அவ்வப்போது சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருள்களைப் பறிமுதல் செய்தாலும் அடுத்த சில நாள்களில் அவை மீண்டும் கைதிகளிடையே புழக்கத்திற்கு வந்து விடுகின்றன.
இந்நிலையில், ஏப். 2ம் தேதி மத்திய சிறையில் சோதனைக் குழுவினர் கைதிகளிடம் திடீர் சோதனை நடத்தினர். சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த திருட்டு வழக்கு கைதியான ராஜதுரை (32) என்பவர், கைப்பேசி வைத்திருந்தது தெரிய வந்தது. சிறைக்காவலர்கள் அவரிடம் இருந்து உடனடியாக கைப்பேசியை பறிமுதல் செய்தனர். அந்தக் கைதியின் அறையில் சோதனை நடத்தியதில் அங்கு 2 கிராம் கஞ்சா தூள் இருந்தது தெரியவந்தது. அதையும் கைப்பற்றினர்.
சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் தன்னை சந்திக்க வந்தபோது கஞ்சாவை கொடுத்ததாகக் கூறியுள்ளார். கைதிகளைப் பார்க்க வருவோர் மூலமாகத் தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறைக்குள் ஊடுருவுகிறதா? அல்லது காவலர்களே கைதிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு கஞ்சா, கைப்பேசி, பீடி, சிகரெட்டுகளை வழங்குகிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாகச் சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.