தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது. நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட இருப்பதால் சென்னையில் மொத்தமாக 17,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் துறையின் சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ''சென்னையில் பெசன்ட் நகர், மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு நாளை இரவு 10 மணி வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர். கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தவிர்ப்பதற்காக சிறப்பு குழுக்கள், தனி கட்டுப்பாட்டு அறை ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஊர்க்காவல் படையினர் உட்பட 17,000 காவலர்கள் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.