புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு ஜெமீன் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி விஜயலட்சுமி. இவர் கடந்த 17 ந் தேதி மதியம் புளிச்சங்காடு கைகாட்டிக்கு நடந்து சென்றபோது கடைவீதிக்கு 200 மீட்டர் முன்பாக ஒரு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கீழே விழுந்த விஜயலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் 19 ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் விபத்து ஏற்படுத்திய நபர் பற்றிய எந்த தகவலும் இல்லை. இது சம்பந்தமாக வடகாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் தான் எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் விபத்து ஏற்படுத்தியது யார் என்று ஆலங்குடி டிஎஸ்பி வடிவேலின் தனிப்படையைச் சேர்ந்த கணபதி, சிவா, கணேசன் மற்றும் வடகாடு தனிப்பிரிவு காவலர் முருகேஷ் ஆகிய போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது விபத்து நடந்த நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்கள் செல்லும் காட்சி கிடைத்துள்ளது.
தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் பற்றி விசாரித்தபோது, மோட்டார் சைக்கிளை ஓட்டியது கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஹாஜாமைதீன் மகன் அசாருதீன் (23) என்பதும் அவருடன் அவரது நண்பர் சென்றதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டை சென்றபோது பெண் மீது மோதியதால் பட்டுக்கோட்டை செல்லாமல் நெடுவாசல் சென்று அங்கிருந்து கல்லணை கால்வாய் கரை வழியாக மீண்டும் மேற்பனைக்காட்டிற்கே திரும்பியதும் தெரிய வந்தது. இந்த விபரங்களைச் சேகரித்த பிறகு அசாருதீனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி கேமரா பதிவால் சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்த தனிப்படை போலீசார் கணபதி, சிவா, கணேசன் மற்றும் தனிப்பிரிவு முருகேஷ் ஆகியோரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.