தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு வீட்டிற்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தாரிடம் ஆறுதல் தெரிவித்ததோடு ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அன்புமணி ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அவ்வாறு ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.
ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டுமென்றால், சிபிஐ விசாரணை தேவை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டால்தான் நேர்மையாக விசாரணை நடக்கும். தமிழ்நாட்டில் பெரிய தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும். சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி, எனத் தொடர்ந்து பல பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டவர்கள், உண்மையான குற்றவாளிகள் இல்லையென ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தாரும், கட்சி நிர்வாகிகளும் சந்தேகிக்கின்றனர். எனவே உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான சிசிடிவி காட்சியை பார்க்கும்போது அரசு எடுத்த நடவடிக்கை முரணாக உள்ளது” எனத் தெரிவித்தார்.