சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டத்தின் மூன்றாம் நாள் அமர்வு இன்று (22.06.2024) காலை 10 மணிக்கு தொடங்கியது. அதன்படி மூன்றாம் நாளான இன்று (22.06.2024) பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது நாளாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் 2 வது நாளாக இன்றும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில் சபாநாயகர் அனுமதி அளிக்காததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது ‘நீதி வேண்டும்’ என முழக்கமிட்டும், ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டும் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேசுகையில், “மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் எனப் பல முறை குரல் கொடுத்தோம். கள்ளச் சாராயம் மக்களின் உயிருடன் தொடர்புடைய பிரச்சனை ஆகும். இதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினோம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன?.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தில் 118 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால் ஒரு நபர் ஆணைய விசாரணை சரியாக இருக்காது. மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரணை வேண்டும் என கோருகிறோம். நீதியை நிலை நாட்ட, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய சிபிஐ விசாரணை அவசியமாகிறது. ஒரு நபர் ஆணையத்தால் உண்மை வெளிவராது.
சாராய விஷ முறிவுக்கு செலுத்தும் மருந்தின் பெயரை மாற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தடை செய்யப்பட்டுள்ள அந்த மருந்தை ஆபத்தான காலங்களில் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் காலதாமதமாக சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தான் உயிரிழப்பு ஏற்பட காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால் முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டமிட்டு பேசி உள்ளார். அரசு மெத்தன போக்கில் செயல்பட்டு வருகிறது; துரிதமாக செயல்பட்டு இருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.