சேலத்தில், ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எஸ்டிபிஐ நிர்வாகிகள் இருவர் வீடுகளிலும் கோவை சிபிசிஐடி எஸ்ஐடி காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (50). ஆர்எஸ்எஸ் பிரமுகர். இவருடைய வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி இரவு, மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசினர். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பச்சைப்பட்டி ஓந்தாபிள்ளைக்காடு பகுதியைச் சேர்ந்த சையத் அலி (42), பொன்னம்மாபேட்டை திப்பு நகரைச் சேர்ந்த காதர் ஹூஸைன் (33) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் எஸ்டிபிஐ அமைப்பின் நிர்வாகிகளாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கோவையில் உள்ள சிபிசிஐடி எஸ்ஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கைதான இருவர் வீட்டிலும் சிபிசிஐடி எஸ்ஐடி காவல்துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 16) திடீரென்று சோதனை நடத்தினர். ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சையத் அலி, காதர் ஹூஸைன் ஆகியோர் வீடுகளில் இருந்து எஸ்டிபிஐ கட்சி சார்ந்த ஆவணங்கள், துண்டறிக்கைகள், ஒரு கைப்பேசி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். இந்த திடீர் சோதனையால் பச்சைப்பட்டி, பொன்னம்மாபேட்டை பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.