கரூரில் மூன்று இடங்களில் சிபிசிஐடி போலீசார் திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்' என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு 14 தனிப்படைகள் அமைத்து இந்தியா முழுவதும் தேடிவந்த நிலையில் இன்று காலை முதல் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று கரூர் மணல்மேடு அடுத்துள்ள கூலிநாயக்கனூர் என்ற இடத்தில் உள்ள அவருடைய ஆதரவாளரான யுவராஜ் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் காவல்துறைக்கான பேருந்தில் வந்திறங்கிய நிலையில், சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வீடுகளில் சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.